• By admin
  • / September 15, 2020
  • / Article

ந்தியாவின் தாழ்த்தப்பட்டவர்கள் உண்மையாகவே தாழ்த்தப்பட்டவர்கள் தானா ⁉️

இன்றைய சூழலில் வேறெங்கும் காண முடியாது ஒரு அடிமை முறை தான் இந்தியாவில் காணப்படும் சாதிய அமைப்பு முறை. ஒரு குறிப்பிட்ட சமூகம் சொகுசாக வாழ்வதற்காக மக்களை பிரித்து அவர்களுக்குள் ஏற்ற தாழ்வுகளை உருவாக்கினர்.

எப்படி ⁉️

இந்த ஆய்வு என்பது யாரால் ஆரம்பிக்கப்பட்டது என்றால், 1984ல் ஆசியவியல் கழகங்கள் இந்தியாவில் நிறுவப்பட்டு அவர்கள் இல்லாத இந்தியாவிற்கு வரலாறு எழுத முனைந்த பொழுது பார்ப்பனர்கள் அவர்களிடம் தங்களது சமஸ்கிருத நூல்களை கொடுக்கிறார்கள். ஆனால் அதன் கால வரைவு மிகவும் அதிகமாக இருந்ததாலும், அக்கதைகளில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை தாழ்த்தி இருப்பதாகவும் இருந்தது.

இந்தப் புள்ளியில் இருந்து தான் பார்ப்பனியத்திற்கு எதிரான , தீண்டத்தகாதவர்கள் பற்றிய ஆய்வும் விரிவு பெற்றன. காலம் கணிக்க முடியாத படி இருந்ததால், ஆசியவியல் கழகத்தினர் இந்தியா பற்றிய குறிப்புகளை கிரேக்க நூல்களிலிருந்தும் விவிலியத்தில் இருந்தும் எடுத்து இந்நாட்டிற்கான வரலாறை எழுத முடிவு செய்தனர்.

விவிலியத்தில் நோவாவின் வெள்ளக்கதை என்னும் ஒரு கதை இருக்கிறது. வெள்ளம் வந்து இந்த உலகம் அழிந்ததாகவும், ஒரு படகில் உயிரினங்களின் ஜோடிகளை எடுத்து மீண்டும் அவ்வுயிரினங்களை பல்கிப் பெருக வைத்ததாகவும் அக்கதை இருக்கும்.  அக்கதை படி நோவாவிற்கு 3 பிள்ளைகள் ஹாம், சாம், யாஃபேத். இந்த யாஃபேத் வழி வந்தவர்கள் தான் விவிலியத்தில் தேசத்தவர்களாக அறியப்படுகிறார்கள். ஆதிஆகமத்திலே நான் யாஃபேத்தின் வழி வந்தவர்களை பல்கிப் பெறுக்குவேன் என்று கடவுள் நோவாவிடம் சொன்னதாக ஒரு செய்தி வரும்.

அப்படி யாஃபேத்தின் வழி வந்தவர்கள் தான் பார்ப்பனர்கள் என்கிற கருத்தை எடுத்துக்கொண்டு இந்தியாவின் வரலாறை எழுத தொடங்குகிறார்கள். அப்பொழுது பார்ப்பனியத்தை எதிர்ப்பவர்களின் குரல்கள் ஒலிக்கத் தொடங்குகிறது. அந்தப் புள்ளியில் தான் இந்த மக்கள் பற்றிய ஆய்வுகளும் தொடங்குகிறது. அப்படி ஆய்வு செய்யும் வேளையில் … இருவரிடத்திலும் கோட்பாடு ரீதியாகவே வித்தியாசம் இருப்பதாக உணர்ந்தனர்.

வாழ்க்கை கோட்பாடுகளில் இருவருக்குள்ளும் பெரிய வித்தியாசம் இருப்பதாக முதலில் கூறியவர் உரூசோ அவர்களின் மாணவர், ஃபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஹென்றி பெர்னார்டின். (திரு. வடிவேல் ராவணன் மொழிபெயர்த்த “ஒரு குடிசையிலிருந்து நூலில் இது பற்றிய குறிப்பு இருப்பதாக கூறுகிறார்கள் ஆனால் PDF கிடைக்கவில்லை)

இதைப் போன்றே ஃப்ரெஞ்ச் புரட்சியின் போது இந்தியாவிற்கு தப்பி வந்து அடைக்கலம் புகுந்த ஆபே டூபே என்பவரும் இதை பற்றி ஆய்வு செய்து வந்தார். இருவரும் பொதுவாக சொன்ன முடிவுகள் 1) இவர்கள் பெண்களோடு சமமாக உட்காரும் பழக்கத்தினை கொண்டவர்களாக இருக்கிறார்கள். 2) இவர்கள் மாட்டுக்கறி உண்பவர்கள் என்றும் கூறுகின்றனர் .

யாஃபேத்தின் வழிவந்தவர்கள் என்று அறியப்பட்ட பார்ப்பனர்களிடம் எந்த ஒரு அறிவும் இல்லை. இந்தியாவின் வரலாறு குடிசையில் தான் இருக்கிறது என்று எழுதிய நூல் தான் “ஒரு குடிசையில் இருந்து” (மேலே கூறிய நூல்). அப்படி பண்பாட்டு ரீதியாகவே நிறைய வித்தியாசங்கள் இருந்தும் இன்று எப்படி ஆரியக்கலாச்சாரம் எல்லோரிடமும் வந்தது என்பதை பார்ப்போம்.

⚫ 🔴

இப்படி ஒன்றாக இருந்த தமிழினம் ஆரிய சூழ்ச்சியால் வீழ்ந்தது பற்றி இருவேறு கோணங்களில் நாம் பார்க்கலாம். தமிழக வாழ்வியலில் சாதி அமைப்பு முறை இருந்தது இல்லை மாறாக அது கொத்து முறையாக இருந்தது ‌என்று தமிழ் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். ஆனால் எந்த விதத்திலும் அதில் ஏற்ற தாழ்வுகள் இருந்ததில்லை என்பதையும் குறிக்கிறார்கள்.

குடி, குலம், கொத்து — இவ்வார்த்தைகளை தமிழர்கள் பயன்படுத்தி இருப்பதை நாம் வெவ்வேறு நூல்களின் வாயிலாக காண முடியும்.

  • குடி என்னும் சொல் புறநானூறு 335 ஆம் கடவுளும் இலவே பகுதியில் காண முடியும்.
  • கொத்து என்னும் சொல் பழைய சொலவடைகளில் இருந்து அறிய முடிகிறது (எ.கா சொத்து முறைக்கு ஆசைப்பட்டு கொத்துமுறையை குழைச்சவன்)

ஆக சாதி என்பது ஆரிய வருகைக்கு பின்பே நம்மிடம் அரங்கேறி இருக்கிறது. தமிழர்கள் ஒரு குடியாகவும், அக்குடியின் கீழ் ஏழு கொத்துகளாகவும் இருந்திருக்கிறார்கள்

அதென்ன ஏழு?

சிலப்பதிகாரம் அடியார்க்கு நல்லாரின் “வடிவேலல்லது வான்பகை பொறாது…” என தொடங்கும் அவ்வுரையில் ஏழ் தெங்கநாடு, ஏழ் குன்ற நாடு, ஏழ் முன்பாலை நாடு, ஏழ் பின்பாலை நாடு, ஏழ் மதுரை நாடு, ஏழ் குணக்கரை நாடு, ஏழ் குறும்பனை நாடு என 49 நாடுகளை பட்டியலிடுகிறார்.

அப்படி 49 நாடுகளின் பெயரில் ஏழு ஏழு என்று வருகிற நிலையில் நாம் இந்த ஏழு கொத்து முறையையும் கணக்கில் எடுத்துக் கொல்லலாம். ஆரியர்கள் இந்தக் குடியில் அபகரித்தது இவர்களது அரசனைத் தான், அதிகார ஆசைகளை காட்டி அரசனைத்தான் முதலாக தங்கள் கட்டிற்குள் கொண்டு வந்ததாக தமிழ் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

அதைத் தான் நாம் மேலே கூறிய சொலவடையில் பார்த்தோம் “சொத்து முறைக்கு ஆசைப்பட்டு கொத்துமுறையை குழைச்சவன்” என்று …

பிறகு பண்பாட்டு ரீதியாக ஆரியம் இந்தச் சமூகத்தில் பரவ ஆரம்பித்தது அதில் குறிப்பாக 2 பண்பாட்டு மாற்றங்கள்

1) தமிழர்களிடம் அக்காளிடம் பெண் எடுக்கும் பழக்கம் இருந்ததில்லை

2) தமிழர்களிடம் கோலம் போடும் பழக்கம் இருந்ததில்லை

ஆனால்,இன்று இந்த இரண்டும் தமிழ்க் கலாச்சாரமாகவே பார்க்கப் படுகிறது . ஆனால் இது அடிப்படையில் ஆரியக் கலாச்சாரமாம். இதன் பின் , ஒன்றின் பின் ஒன்றாக ஒருவருக்குள் பல உரசல்கள் வர பார்ப்பனர்கள் அரசனை பெரும் மன்னனாக்கி … அம்மன்னனை தலைமையாக வைத்து தங்களது பார்ப்பனிய மதத்தை இங்கு பரப்பினர்.

பெண்களோடு சரிசமமாக உட்காருபவர்கள் என்பது தான் நம்மைப் பற்றிய தனித்துவமான குறிப்பாக இருந்தது. ஆனால் பார்ப்பனியத்திற்கு ஆளாகி பெண்களை அடக்கி ஒடுக்கும் சமூகமாக மாறிவிட்டோம் .

இதைப் போலவே இன்னொரு வரலாறு இருக்கிறது, தந்தைப் பெரியாரும் புரட்சியாளர் அம்பேத்கரும் ஏற்றுக் கொள்ளும் வரலாறாக இது இருக்கிறது. இங்கு இயல்பாகவே நம் அனைவரிடத்திலும் மாட்டிறைச்சி சாப்பிடும் வழக்கம் இருந்திருக்கிறது. சொல்லப்போனால் பார்ப்பனர்கள் தான் அதிக அளவில் மாட்டிறைச்சி உண்பவர்களாக இருந்திருக்கிறார்கள். இதைப் பெரியாரோ அம்பேத்கரோ புத்தரோ சொல்லவில்லை, அவர்களது ரிக் வேதத்தில் இதைப் பற்றி குறிப்பு இருக்கிறது . இன்னும் ஆதாரம் வேண்டுமென்றால் சங்கராச்சாரியாரின் “தெய்வத்தின் குரல்” புத்தகத்தில் இறைச்சி உண்பதைப் பற்றிய செய்திகள் இருக்கிறது. பார்ப்பனர்கள் அடிச்சு நகட்டுகிறார்கள் மாட்டுக்கறியை, இக்காலகட்டத்தில் தான் “புத்தர்” வருகிறார்.

அவர்தான் பார்ப்பனர்களிடம் சென்று “நம் நாடு விவசாயத்தை நம்பி இருக்கும் நாடு, நீங்கள் இப்படி மூன்று வேலையும் மாட்டை அடித்து உண்டால், விவசயாம் எப்படி செய்வது, உண்ணவேண்டாம் என்று சொல்லவில்லை ஆனால் அளவாக உண்ணுங்கள் ” என்று கேள்வி எழுப்பியது மட்டுமல்லாமல் பார்ப்பனர்களிடமிருந்து மாடுகளை காப்பாற்றும் இயக்கம் ஒன்றையும் உருவாக்குகிறார். இதனால் தான் ஒட்டுமொத்த மக்களும் புத்தரின் வழியில் நடக்கத் துவங்கினர். பௌத்தக் கோட்பாடு உருவாக்குகிறது. இதைத் தான் தந்தைப் பெரியார் சொல்லுவார் “இவனுகள எதிர்த்து 2000 வருசம் முன்னாடி புத்தன் கேட்டான் அடுத்து நான் கேக்குறேன்” என்பார்.

திருவள்ளுவரின் புலால் உண்ணாமை கூட இதை எதிர்த்து கூட இருக்க வாய்ப்பிருக்கிறது ‼️ இப்படி புத்தரின் இயக்கத்தினால் பார்ப்பனிய வேத மதம் மொத்தமாக சரிந்தது. பின்னர் மாட்டை கடவுள் ஆக்கியது நாம் அனைவரும் அறிந்ததே‌. இதன் பின்னர் தான் இந்தியாவில் உணவு ரீதியான அரசியல் / பிளவுகள் உருவாகிறது.

“மாட்டை உண்பவன் அசுத்தமானவன், மாடு என்பது நமக்கு கடவுள், எந்த மாமிசம் வேண்டுமானால் சாப்பிடலாம் ஆனால் கோமாதா உண்ணுதல் கூடாது ” என்று தொடர் பிரச்சாரம் நடந்தது. இதில் இருந்து தான் சைவம், அசைவம், மாட்டுக்கறி சாப்பிடுபவர்கள் என்று மூன்று விதமாக உணவு பழக்கங்கள் வந்தது. இதில் மாட்டுக்கறியை கைவிட்டவர்கள் தான் இடைநிலை சாதிகளாக மாறினார்கள்.

உணவை கைவிடாதவர்கள் ஊருக்கு வெளியே தள்ளிவைக்கப்பட்டார்கள். இப்படித் தான் ஊரும் சேரியும் உருவாகி இருக்கிறது.

-கரிகாலன்.